நுவரெலியா, மாகாஸ்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, கட்டணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (10) திங்கட்கிழமை காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் இடப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.