நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மழைவீழ்ச்சியினால் பல நீர்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதிலும், இதுவரை பெரும் வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழை உடனான வானிலை காரணமாகப் பல நீர்தேக்கங்களில் இயல்பான அளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் மத்திய பிரிவின் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக தொடர்ந்து களு கங்கையின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ள போதிலும், அது பெரும் வெள்ளப்பெருக்கு அபாயமாக மாறவில்லை. களனி கங்கையிலும் இயல்பான நீர்மட்டம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. களு கங்கை ஆற்றுப்படுகையின் சில இடங்களில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நில்வளவை கங்கை, ஜின் கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகிய ஆற்றுப் படுகைகளிலும் நீர்மட்டம் இயல்பான அளவில் அதிகரித்துள்ளது.
ஏனைய ஆற்றுப் படுகைகளின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளதுடன், ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை எட்டாமல் பொதுவாக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. இதனால் தெதுரு ஓயா நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு தற்சமயம் வினாடிக்கு சுமார் 5,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இராஜாங்கனை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு தற்சமயம் வினாடிக்கு சுமார் 2,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளுக்கு அமைய, வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மிதமான பலத்த மழை பெய்யக்கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், திடீரெனப் பெய்யும் கடும் மழையால் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டில் நிலவும் வானிலையைக் கருத்திற் கொண்டு, தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகளுக்கு அருகில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.