காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரான நயீம் அபு நஹேல் (Naeem Abu Nahel), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள போதிலும் காஸா மீதான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை சர்வதேச அளவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஸா நகரின் மேற்கு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் இலக்கு வைக்கப்பட்டதாக ஹமாஸ் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 வயதான நயீம் அபு நஹேல், கடந்த செப்டெம்பர் மாதம் முதல் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார். அவரது முன்னைய அதிகாரி முவெயின் அல்-அரபித் (Muein al-Arabid), இஸ்ரேலியப் படையினரின் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அபு நஹேல் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோரும் அபு நஹேல் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான ஷின் பெத் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஹமாஸின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸின் இராணுவத் திறன்களை மீளக் கட்டியெழுப்ப முயன்றதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், காஸாவின் ஏனைய பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் மேலும் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் பொலிஸ் நிலையமொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் அதிகாரிகள் என ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய காஸாவின் வாடி காஸா பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் 12 வயதுச் சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீனத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவின் பொலிஸ் கட்டமைப்பை இலக்குவைத்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக ஹமாஸ் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. எனினும், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னரும் காஸாவில் உயிரிழப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரவில்லை.
காஸா சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து 2026 நவம்பர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறைந்தது 1,679 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிபரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இதே காலப்பகுதியில் ஆறு இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலே தற்போதைய போர் ஆரம்பமாவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 74,740க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள், உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் காஸாவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றியடையும் என்பதே தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.