இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கல்வி, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயரும் கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை  (27 ) கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, அமெரிக்கத் தூதுவரை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஃபுல்பிரைட் புலமைப்பரிசில் திட்டம் நீண்டகாலமாக ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டியதுடன், அத்திட்டத்தை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கை – அமெரிக்க இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கையை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

அத்துடன், பொதுவான கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் இணைந்து செயற்படுவது உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதிப் படையின் (Peace Corps) ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதுவர் பிரதமருக்கு விளக்கமளித்தார்.

பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இச்சந்திப்பில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி டேவிட் மையர்ஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா பொகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.