சிறிலங்கா  ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவான பாடல்களைக் கேட்பதற்கு அனுமதி இருக்கும் போது, அவர்களுக்கு எதிராக அனைத்துப் பாடல்களையும் ஒன்றுதிரட்டி ‘சுளி சுளங்க’ என்ற பெயரில் நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இசைப் போராட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மக்களின் சிந்தனை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் தொழில் செய்யும் சுதந்திரம் ஆகியவை முற்றாக முடக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் எவ்வித தயக்கமுன்றி அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதுடன், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமையால் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மிஹிந்தலை தேரரிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியமை தொடர்பாக அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவொரு கண்டனமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பௌத்த மதத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான கருத்துக்களை வெளியிடும் தொழிலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டு, பொலிஸ் இராஜ்யத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் புதிய சட்ட வரைவின் மூலம் மக்களின் அடிப்படை மனிதவுரிமைகள் மீறப்படுவதுடன், பச்சை குத்துதல், முடி வளர்த்தல், ஆடை அலங்காரங்கள் மற்றும் விவாகரத்து நடைமுறைகள் மீது கூட கட்டுப்பாடுகள் விதிக்க முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்தை விமர்சித்து எழுதப்படும் பாடல்களை எழுதியவர்கள் மற்றும் அதற்கு வாக்குமூலம் அளித்த சட்டத்தரணிகளை பொலிஸார் விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்துகின்றனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு ஆதரவான பாடல்களைக் கேட்பதற்கு அனுமதி இருக்கும் போது, அரசாங்கத்திற்கு எதிரான பாடல்களையும் தொலைபேசி நிறுவனங்கள் ஊடாக 'ரிங்டோன்' ஆகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.தீவுகள் ஆராயுங்கள்

கடந்த காலத்தில் அரச சொத்துக்களை அழித்து, பஸ்களை எரித்து, வங்கிகளைக் கொள்ளையடித்த ஜே.வி.பி தரப்பினருக்கு அரசியலில் ஈடுபட ஜனநாயக உரிமை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அரசாங்கத்தின் 2.05 பில்லியன் டொலர் இழப்பு, 300 கொள்கலன் விவகாரம் மற்றும் நிலக்கரி ஊழல்களை மறைக்க முற்படுவதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைப் 'பயங்கரவாதிகள்' என முத்திரை குத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.

இதன் காரணமாக, அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் நந்தா மாலினி நடத்திய 'பவன' இசைப் பொழிவு போன்று, அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துப் பாடல்களையும் ஒன்றுதிரட்டி சுளி சுளங்க என்ற பெயரில் நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இசைப் போராட்ட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டில் பேச்சு சுதந்திரம் அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு நபரையும் பெயர் குறிப்பிடாத பாடல்களைக் குற்றமாக அறிவிப்பது கேலிக்கூத்தாகும்.

மேலும், சிறையிலுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலைக்காகப் பௌத்த துறவிகள் அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய ஜனாதிபதியால் தீர்வு வழங்க முடியும் என்ற போதிலும், அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கையால் அதனைச் செய்ய மறுக்கிறது. அரசாங்க ஆதரவுப் பேரணிகளுக்கு ஒலிபெருக்கிகளுடன் வீதிகளை மறிக்க அனுமதிக்கும் பொலிஸார், துறவிகளின் போராட்டத்திற்குத் தடை கோரி நீதிமன்றம் செல்வதாகக் குற்றமாகும். இருப்பினும், துறவிகளின் இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.