புதிய திரைப்படங்களுக்கு தினமும் 6 காட்சிகள் மற்றும் காலை 6 மணி முதல் திரையிட அனுமதி அளித்துள்ள தவெக அரசின் உத்தரவு, இளைஞர் சமுதாயத்தையும் தமிழக கலாச்சாரத்தையும் சீரழிக்கும் செயலாகும் என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேலும், இது கூட்ட நெரிசலால் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது தவெக அரசு.

இளைஞர் சமுதாயத்தையும், தமிழக கலாச்சாரத்தையும் சீரழிக்கும் நோக்கில் பொழுது விடிந்தவுடன் புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடலாம் என்று தவெக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பேரதிர்ச்சியளிக்கிறது.

நான் முதல்வன், புதுப்புது நூலகங்கள், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்றெல்லாம் மாணவர்களின் அறிவுசார் தமிழகத்தின் பக்கமாக அழைத்துச் செல்ல திராவிட மாடல் ஆட்சியில் வியத்தக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியிலோ “பொழுது விடிந்ததும் சினிமா” “காலை 6 மணி முதல் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிடலாம்” என உத்தரவு அளித்து, ஒரு தலைமுறை அழிப்பைச் செய்யத் தொடங்கி விட்டது.

இதே முதல்வர் விஜய்யின் லியோ பட ரீலீஸின் போதுதான் ஒரு திரையரங்கில் காலை 6 மணிக் காட்சியில் ஏற்பட்ட நெரிசல், கண்ணாடிகள் உடைப்பு, கலாட்டா என மக்கள் பதற்றத்தில் மூழ்கினார்கள். அப்படியொரு ஆபத்தை தவிர்த்திடவே திராவிட மாடல் ஆட்சியில் காலை 6 மணி காட்சிக்கு மட்டுமல்ல, ஒரு நாளைக்கு 6 காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அன்றைக்கு “7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு” லியோ படத் தரப்பினர் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போது கூட பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதையே உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆகவேதான் 6 மணி அல்லது 7 மணிக் காட்சியோ, ஒரு நாளைக்கு 6 காட்சிகளோ அனுமதிக்க முடியாது என்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் “6 மணி காட்சி மற்றும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்” என புதிய திரைப்படங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மிகக் கொடுமையான கலாச்சாரத் தாக்குதல் மட்டுமல்ல, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலும் கூட.

அடுத்தடுத்துக் காட்சிகள் திரையிடப்படுவதால், மறு காட்சி தொடங்குவதற்கு இடைப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருக்கும். அதனால், தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்களும் உள்ளே நுழைபவர்களும் முட்டி மோதி அதனால் நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படலாம். ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நிகழ்வு.