மக்களை மடைமாற்ற எம்.எல்.ஏக்கள் அதிருப்தி என பொய்குற்றச்சாட்டை முன்வைப்பவருக்கு ஒரு தொண்டனை கூட விலைக்கு வாங்க முடியாது என முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு தவெக மாநில செய்தி தொடர்பாளர் சவுந்தரராஜா பதில் அளித்துள்ளார்.
தவெகவில் 70 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனர். தவெக ஆட்சி கவிந்த பிறகு நடைபெறும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்த நிலையில் இதற்கு தவெக மாநில செய்தி தொடர்பாளர் சவுந்தரராஜா பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தவெக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறி மக்களை மடைமாற்றம் செய்யும் வேலையில் திமுக இறங்கியுள்ளது. குதிரை பேரம் நடத்துவது, எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்குவது என்பது திமுகவிற்கு கைவந்த கலையாகும். அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, ஓபிஎஸ், சேகர்பாபு போன்ற ஊழல்வாதிகளை இணைத்து அரசியல் செய்வது யார்.
உதயசூரியன் சின்னத்தில் வென்ற மதிமுக எம்.எல்.ஏவை மிரட்டி திமுகவில் இணைய வைத்தது யார். தவெக எம்.எல்.ஏக்கள் இல்லை; தொண்டனை கூட விலைக்கு வாங்க முடியாது. ஆட்சி மாற்றம் வரும், அடுத்து நாம் தான் என நினைக்கும் உங்களின் பகல் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.