தவெக அரசு தமிழகத்தில் மத அரசியலை திணிப்பதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சாதியில்லை, மதமில்லை என்று சினிமா வசனங்கள் பேசி அனைத்து தரப்பினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்த தவெக, 2026-27 கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் "எம்.ஏ. கிறிஸ்தவ படிப்பை" கொண்டுவருவதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்க அதிகாரமளித்துள்ளது.
தவெக அரசின் இச்செயல் அப்பட்டமான மத அரசியல் திணிப்பதாகும். இதுதான் மதச்சார்பற்ற அரசா ஜோசப் விஜய்?
இத்துறை சென்னை பல்கலைக்கழகத்தில் 1984 முதலே உள்ளதுதான். ஆனால், 42 ஆண்டுகளாக எந்த அரசும், இதனை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தவில்லை.
நமது அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 28-ன் படி, அரசுப் பணத்தைக் கொண்டு கல்லூரிகளில் மதப் போதனை வழங்க முடியாது. அப்படியிருந்தும், ஒரு கிறிஸ்தவ முதல்வர் பதவியேற்ற பிறகு மட்டும், ஒவ்வொரு கல்லூரிக்கும் கிறிஸ்தவ படிப்புகளைக் கொண்டுவர துடிப்பது ஏன்?
இது ஒரு சாதாரண கல்லூரிப் பட்டப்படிப்பா? அல்லது, கிறித்துவ மிஷனரியை நடத்த வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
சிறுபான்மை மதப் படிப்புகளைப் பரப்ப பெரும்பான்மையினர் செலுத்தும் வரியை பயன்படுத்தும் முதல்வர் ஜோசப் விஜய், சனாதன தர்மம், கோயில் கட்டடக் கலை, ஹிந்து தத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரத்யேக எம்.ஏ. டிகிரியை இதேபோன்று கல்லூரிகளில் பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பாரா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.