‘கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையைப் பாராட்டியும், அவர் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கிலும், 'மக்கள் சேவை இயக்கம்' என்ற பெயரில் பா.ஜனதா நிர்வாகிகளுடனான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நிகழ்ச்சிக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், “கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக ஒரு மாதத்துக்கு முன்பே நான் கூறி வந்தேன்.
ஆனால், அப்போது இந்த விவகாரத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியரை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தற்போது போலீஸார் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல பெண் போலீஸ் அதிகாரிகளிடமும் அமைச்சர்கள் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. இந்த தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் உரிய விளக்கம் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?
தவறு செய்த எம்எல்ஏ மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சமா? எனவே பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். பாரதிய ஜனதா இதைதான் எதிர்பார்க்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் மாநில அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. மாறாக, உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரம் இருந்தும், ஆட்சியர் அமல்படுத்த முன்வரவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவதால் மட்டும் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு சந்தித்தே ஆக வேண்டும். மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் மீது உச்ச நீதிமன்றம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.