டைனோசர்களின் நேரடி வாரிசுகளாகக் கருதப்படும் உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான பறவை இனமான தீக்கோழி இனத்தைச் சேர்ந்த ‘கசோவரி’ (Cassowary), அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் உயிரியல் பூங்காவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு முட்டையிட்டுள்ளது.
இப்பூங்காவில் கடந்த 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் கசோவரி பறவை ஒன்று முட்டையிட்டுள்ளது.
இப்பூங்காவில் உள்ள ‘மார்டினா’ என்ற 10 வயது பெண் கசோவரி பறவை, வழக்கத்திற்கு மாறாக ஒளிரும் பச்சை நிறத்தில் முட்டையிட்டுள்ளது. ‘பிலிவெர்டின்’ (Biliverdin) என்ற பிரத்யேக நிறமி காரணமாகவே இந்த முட்டை இந்தத் தனித்துவமான நிறத்தைப் பெற்றுள்ளது. காடுகளில் இவை தரையில் கூடு கட்டும்போது, இந்த நிறம் எதிரிகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாக்க உதவும் இயற்கை அரணாகச் செயல்படுகிறது.
கசோவரி பறவைகளின் வழக்கப்படி, பெண் பறவை முட்டையிட்டவுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கும் முழுப் பொறுப்பையும் ஆண் பறவையே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது.
அவுஸ்திரேலியாவின் மழைக்காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த விசித்திரமான பறவையின் முட்டையானது, விலங்கு மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.