“வாக்குத் திருட்டு என்று ஒன்று கிடையவே கிடையாது. இது ஒரு தவறான, தீய நோக்கத்துடன் கூடிய பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் மட்டுமே” என பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “வாக்குத் திருட்டு என்று ஒன்று கிடையவே கிடையாது. இது ஒரு தவறான, தீய நோக்கத்துடன் கூடிய பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் மட்டுமே. இதைப் புரிந்துகொள்ள, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை வரையிலான முழு செயல்முறையையும் அறிந்து கொள்வது அவசியம்.
எஸ்ஐஆர் முறையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் செயல்பாட்டில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்புகளைச் செய்கின்றனர். இதனுடன், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புச் செயல்முறையை மிக நெருக்கமாக இருந்து கண்காணிக்கின்றனர். இவர்கள் பெயரளவில் மட்டும் நியமிக்கப்படவில்லை; இந்த முழுச் செயல்முறையிலும் ஒரு தணிக்கையாளரைப்போல முக்கியப் பங்காற்றுகின்றனர்.