“விசிக இடம்பெற்றுள்ள தவெக கூட்டணிக்கு பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள். இது என்ன கணக்கு? இதற்கு இரு வாக்குச்சாவடிகளை உதாரணமாக காட்டுங்கள். எந்த சூழலிலும் திருமாவளவனுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இப்படி பேசுகிறார்கள்” என்று விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேசியுள்ளார்.

திண்டிவனத்தில் நேற்று (அக்.11) நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “தவெக உடன் இன்றைக்கு உள்ள கூட்டணி என்பது காலம் போட்ட கணக்கு. பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக கூட்டணி அரசு உருவாகி விசிகவின் மடியில் வந்து விழுந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பேசியவன் நான். காலம் மாறிவரும் சூழலில் கூட்டணியை தக்கவைக்கும் முயற்சியை திமுக எடுக்கவில்லை.கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை வலுப்பெற்ற போது அதற்கு இணங்கி, திமுக தனது கூட்டணிக் கட்சிகளை தக்க வைத்திருக்க வேண்டும். திமுக தன்னை சுய விமர்சனம் செய்யவில்லை. இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வந்ததே வெற்றி என்று சொல்கிறார்கள். இரண்டாம் இடமே போதுமா? வெற்றி பெற வேண்டாமா? வெற்றி பெற கூட்டணிக் கட்சிகள் தேவைப்படுகிறது. எந்தக் கட்சியை வைத்து வெற்றி பெற முடியும் என்ற கூட்டணிக் கணக்கை போட வேண்டும்.

இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக சொல்லிவிட்டது. ஆனால், மதுராந்தகத்தில் பாமகதான் தவெகவுக்கு வாக்களித்துவிட்டது என சொல்கிறார்கள். யார் இதுகுறித்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்தது. இது வன்னியர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடி, இது பட்டியலினத்தவர் அதிகம் உள்ள வாக்குச்சாவடி என யாராவது ஆய்வு செய்தார்களா?ஒரு தம்பி எனக்கு தகவல்கள் அனுப்பியிருந்தார். வன்னியர்கள் அதிகம் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அதிகம் வாக்குகளை திமுக வாங்கியுள்ளது என்பது தெரிகிறது.

பாமகவும், பாஜகவும் இருக்கும் அணியில் இருக்க மாட்டோம் என 15 ஆண்டுகளாக திரும்பத் திரும்ப (விசிக) சொல்லி வருகிறோம். நான் இதுபோல சொல்வதால் பாமகவுக்கு நல்லது நடக்கிறது. பாமக உள்ள அணிக்கு விசிக வராது என்பதை காரணமாக காட்டி, அக்கட்சியினர் தங்கள் சமூகத்தை ஒன்று திரட்டுகிறார்கள்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தலித் வெறுப்பை பாமக தூக்கிப் பிடித்த காரணத்தால், அக்கட்சியோடு இனி கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். எங்களுக்கு இருந்த நல்லிணக்கத்தை தவிர்க்கும் முடிவை ராமதாஸ்தான் எடுத்தார். அதனால்தான் பாமக, பாஜக இரு கட்சிகளும் ஒரே மாதிரியாக சாதிய, மதவாத தேர்தல் உத்தியை கையாளுகிறார்கள். எனவே இந்த இரு கட்சிகளோடு கூட்டணி கிடையாது என அறிவித்தோம்.

நாங்கள் இப்படி சொல்லும் போது விசிக இடம்பெற்றுள்ள தவெக கூட்டணிக்கு பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள். இது என்ன கணக்கு? இதற்கு இரு வாக்குச்சாவடிகளை உதாரணமாக காட்டுங்கள். எந்த சூழலிலும் திருமாவளவனுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இப்படி பேசுகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை மாநாட்டுக்கு முன்னர், விசிகவினர் எல்லாம் விஜய் பின்னால் போய்விட்டார்கள். திருமாவளவனோடு யாரும் இல்லை என்றார்கள். விசிக கூடாரம் காலி என்றார்கள். ஆனால் உளுந்தூர்பேட்டை மாநாட்டை பார்த்த முதல்வர் விஜய் ‘மிரட்டிவிட்டீர்கள் சார்’ என்று தொலைபேசியில் பாராட்டி பேசினார். என்மீது விசிகவினர் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்றார்.