“ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தவறான தகவலின் அடிப்படையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியுள்ளார்” என கோவையில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “பொதுவெளியில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.3) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தாராபுரத்தில் நடந்த பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையும், மகனும் தங்களது வக்கிரத்தை, உண்மையான முகத்தை பிரச்சாரத்தில் வெளிப்படுத்துகின்றனர்.

இனிமேல் அவர்களுக்கு தோல்வி மட்டும்தான். வெற்றியே கிடையாது. இந்த வயதிலும் ஒரு பட்டியலின பெண்ணைப் பற்றி மோசமாகப் பேசியுள்ளார். திமுகவினர் சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பவர்கள். சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள். திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடிந்து விட்டது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக தற்போது எந்நிலையில் உள்ளதோ, அதே நிலைமைதான் திமுகவுக்கும் ஏற்படும். பொதுவெளியில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த நிலையிலும் நாங்கள் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை. திமுகவிடம் இருந்து தவறான தகவல் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சென்றுள்ளது. அதை வைத்து மார்க்சிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் பேசுகிறார். அதுபோன்ற ஒன்று நடந்தது என்று அவர்கள் நிரூபிக்கட்டும்.

எஸ்ஐஆருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஒரே கட்சி தவெகதான். எஸ்.ஐ.ஆர் பணி சரியான முறையில் நடந்திருந்தால் இந்நேரம் 160 தொகுதிகளில் கூட வெற்றி பெற்று இருப்போம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து தேர்தல்களிலும் திமுக தோல்வியை மட்டுமே தழுவும். இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் வாங்குவதே மிகவும் கடினம்.

இடைத்தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போது உள்ள அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை இன்று முட்டுச்சந்துக்கு கொண்டு போய் நிறுத்திவிட்டார்.

அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். இதில் மாற்றுக் கருத்து கிடையாது.

நெய்வேலியில் இருந்து மத்தியத் தொகுப்புக்கு வரும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டது. அதனால் தற்காப்புக்காக ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு தான் கூறியிருக்கிறோம். தொழில் துறையினருக்கு எந்த ஒரு மின்சாரத் தடையும் நாங்கள் செய்யவில்லை. சில மாதங்களில் லாங் டெர்ம் பர்சேஸ் டெண்டர் விடப்படும்” என்று அவர் கூறினார்.