ஆனால், ‘ஆகாஷை போலீஸார் கொலை செய்துள்ளனர். இதனால் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன் விசாரணைக்கு வந்தபோது, ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவையும் சேர்க்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஆகாஷ் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், அவரது பெற்றோர் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால், ஆகாஷின் உடல் 100 நாட்களாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பிரேதப் பரிசோதனைக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிபதி, காவல்மரண வழக்குகளில் அதிகாரிகள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இருப்பினும், தற்போது வரை மனுதாரர் அவர் மகன் உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, ஆகாஷின் உடலை அவர் பெற்றோர் இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் நாளை (இன்று) போலீஸாரே ஆகாஷ் உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை 16-ம் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.