அவுஸ்ரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும உட்பட அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை (30) அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
திறைசேரியின் செயலாளரை குழுவுக்கு அழைத்து விசாரிப்பதுடன் இந்த விடயத்தை கைவிட கூடாது. கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரச நிதி இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் குழு மௌனமாக இருக்க கூடாது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான சாணக்கியன் இராசாணிக்கம் குழுவில் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் உணர்வுபூர்வமானது ஆகவே இதன் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என பிரதி அமைச்சரான சதுரங்க அபேசேகர வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.
அவுஸ்ரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் நிதி மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும மற்றும் திறைசேரியின் அதிகாரிகளை குழுவுக்கு அழைப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குழுவின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், ஹர்ஷன ராஜகருணா,ரவூப் ஹக்கீம் ஆகியோர் திறைசேரியின் செயலாளரை குழுவுக்கு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதற்கு ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது குழுவின் தலைவரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட அவதானம் செலுத்தியுள்ளார்கள். ஆகவே இந்த விடயம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பின் வலியுறுத்தல்களையும் ஆராய்ந்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா திறைசேரியின் செயலாளர் மற்றும் அரச நிதி முகாமைத்துவ அலுவலகத்தின் அதிகாரிகளை நாளை வியாழக்கிழமை குழுவுக்கு அழைக்க தீர்மானித்தார்.
குழுவுக்கு முன்னிலையாகும் தரப்பினர் மற்றும் அவர்கள் குறிப்பிடும் விடயங்கள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகின்ற நிலையில், திறைசேரியின் செயலாளர் முன்னிலையாகுவதை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதை தவிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதால் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினரான சதுரங்க அபேசிங்க வலியுறுத்தினார்.இதற்கமைய அந்த கூட்டத்தை குறிப்பு எடுப்பதற்கு மாத்திரம் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
2.5 மில்லியன் டொலர் மோசடி: நிதிக் குழுவில் திறைசேரி அதிகாரிகள் விளக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space