2100ஆம் ஆண்டுக்குள் மனித குலமே முற்றாக அழிந்துவிடுவதற்கான ஆபத்து நிலவுவதாக “தி லான்செட்” (The Lancet) என்கிற பிரபல மருத்துவ இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு மனித குலத்தையே வேரோடு அழித்துவிடுமளவுக்கு ஆபத்து மிகுந்தவை என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகெங்கும் நாடுகளுக்கிடையே அணு ஆயுத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இவை மனிதர்கள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் அதேவேளை மறுபுறம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முறையற்ற விதமாக, தகாத நோக்கோடு பயன்படுத்தப்பட்டு, பல்வேறு மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது.
2100க்குள் மனித குலம் முழுமையாக அழிந்துவிடும் என்று உறுதிபட இந்த அறிக்கை கூறவில்லை என்றாலும், அழிவை நோக்கிச் செல்வதற்கான ஆபத்துக்களும் மோசமான விளைவுகளை அதிகமாக ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு, பொறுப்புணர்வுடனான தொழில்நுட்பப் பாவனை, சரியான கொள்கைகள் மூலம் ஆபத்தான நிலைமையை குறைக்க முடியும் என்றும் இதில் தெரிவிக்கப்படுகிறது.
அணு ஆயுதத் தாக்குதல்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பாவனை தவிர காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொற்றுநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு முதலானவையும் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்றும் குறித்த மருத்துவ இதழ் அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.