தமிழகத்தில் பல்வேறு சிறைத்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி சங்கர் உத்தரவிட்டுள்ளார். சென்னை புழல் மற்றும் தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டாலும் சிறை கைதிகள் தப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்புக் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து தீர்வுக் காணவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்தச் சூழலில், தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபியான சங்கர் சிறைத்துறை புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, சிறைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர் சிறைத்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கடலூர், மதுரை, சேலம் மத்திய சிறைகளின் சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை இயக்குநர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஏ.பரசுராமன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜி.வினோத், கடலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு காலியாக உள்ள பணியிடத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது புதிய பணியிடங்களில் பணியில் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறையில் கைதிகள் தப்பும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் அப்பிரிவு இயக்குநரான கூடுதல் டிஜிபி சங்கர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைத்துறை அங்காடிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், சிறைத்துறை நடத்திய பெட்ரோல் பங்க், சிறை கைதிகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து சிறைச் சாலைகளிலும் உள்ள கைதிகள் மாலை 6 மணிக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறை அறையில் அடைக்கப்பட வேண்டும்.
7 மணி அளவில் சிறை கைதிகள் அனைவரும் அடைக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில் உயர் அதிகாரிகளுக்கு சிறைத்துறையினர் வீடியோ மூலம் காட்ட வேண்டும். இதை மேல் அதிகாரிகள் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும் என சிறைத்துறை இயக்குநர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.