யாழ்.வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்புப் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13.11.2026) 30 ஆவது வாரமாக மயிலிட்டி கொமாண்டோப் பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.   

நேற்றைய போராட்டத்தில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், கிராம மட்டப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுத் தமது சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். குறிப்பாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த தாம் சொந்த மண்ணிலிருந்து வெளியேறி 36 ஆண்டுகள் கடந்தும் தமது பூர்வீக வாழிடங்களுக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலை தொடர்வதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டனர்.

வலிகாமம் வடக்கு ஜே- 249, ஜே- 256, ஜே- 248, ஜே- 251 மற்றும் ஜே- 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதியில் உள்நாட்டு யுத்தம் காரணமாக அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் அப் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் இதுவரை வெளியேறாத நிலையில் அவை இன்றுவரை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந் நிலையில் மயிலிட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ்மக்கள் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் போராடி வரும் நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந் நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதெனக் காணி உரிமையாளர்கள் முடிவெடுத்துக் கடந்த- 2025 ஆம் ஆண்டு யூன் மாதம்-21 ஆம் திகதி ஆரம்பித்துத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.  

தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்த பூர்வீக மண்ணில் தங்களால் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர். எமது பூர்வீக உரிமையை உறுதிப்படுத்திக் காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.