தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ் நகரிலே அணிசெய்ய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அகவை நிறைவு விழா நடைபெற்றது.
குறிஞ்சி நிலக் கரையமைந்த மண்டப வாசலில் கதிரோனின் ஒளிபரவிய காலைப்பொழுதில் பசுமைக் கட்சியின் (Büdnis90/Die Grünen) லண்டவ் நகரசபை உறுப்பினரான சோபியா பேர்லின் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிட விழாத் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்,வெற்றியாளர் மற்றும் மதிப்பளிப்பைப் பெறவந்த அறப்பணியாளர் ஆகியோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவிப் பன்னீர் தெளித்துச் சந்தனப் பொட்டிட்டு வாழ்த்திசைப்பாவுடன் அரங்கினுள் அழைத்துவரப்பட்டனர்.
யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக் கட்சியின் (Büdnis90/Die Grünen) லண்டவ் நகரசபை உறுப்பினரான சோபியா பேர்லின், லண்டவ் காவல்துறைப் புலனாய்வுத் துணை ஆணையாளர் திரு. வொல்வ்காங் வையாண்ட், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் றைன்லாண்ட்பாள்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு.சபாபதி விமலநாதன், சார்லாண்ட மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகசபை பரணிரூபசிங்கம், றைன்லாண்ட்பாள்ஸ் மாநிலத் துணைப் பொறுப்பாளர் திரு.கந்தையா பூபால், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னிலைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான முனைவர் திரு. சிவநேசன் விபிலன், தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளர் ‘தமிழ் மாணி’ திரு. நவரட்ணம் நந்தகுமார், லண்டவ் தமிழாலயத்தின் ஆசிரியர் மற்றும் முன்னாள் நிருவாகியுமான ‘தமிழ் மாணி’ திரு. கந்தசாமி குலேந்திரராசா ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றையடுத்து, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வரவேற்புரையை யேர்மன் மொழியில் செல்வி டிலக்ஷி ரவி வழங்கினார்.
5,10,15 ஆண்டுகள் அறப்பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் நிருவாகிகள் மதிப்பளிக்கப்பட்டதோடு, 20, 25 மற்றும் 35 ஆண்டுகள் அறப்பணியாற்றியவர்களை மண்டப வாசலில் சந்தனமாலை அணிந்து இசையுடன் அனைவரும் எழுந்துநின்று அரங்கிற்கு அழைத்துவந்து பன்னீர் தெளித்துச் சந்தனப்பொட்டிட்டு வரவேற்றனர். 20, 25 ஆண்டுகள் அறப்பணியாற்றியோருக்கு முறையே தமிழ் வாரிதி’ மற்றும் தமிழ் மாணி’ என்ற சிறப்புப் பட்டமும் 35ஆண்டுகள் அறப்பணியாற்றியவருக்குச் சிறப்புச் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மற்றும் தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்மொழிப் பொதுத்தேர்விலும் தமிழ்த்திறன் போட்டியிலும் நாடுதழுவிய மட்டத்தில் பிராங்பேர்ட் தமிழாலயம் மூன்றாமிடத்தைப் பெற்றமைக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது. கலைத்திறன் போட்டியில் மாநில மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற பிராங்பேர்ட், பாட்சுவல்பாக் மற்றும் டாம்ஸ்ரட்- றோஸ்டோர்வ் ஆகிய தமிழாலயங்களுக்கும் மதிப்பளிப்பு இடம்பெற்றது.
மதிப்பளிப்புகள், வாழ்த்துரைகள், உரை, கவிதை, விடுதலைப்பாடல்கள் மற்றும் விடுதலை நடனங்களோடு விரிந்த அரங்கில் 14 ஆண்டுகள் தமிழாலயங்களோடு இணைந்து பயணித்து 12ஆம் ஆண்டுத் தேர்வில் சித்தியடைந்து விடைபெறும் மாணவர்கள் மகாகவி பாரதியாரின் ‘தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற அறைகூவலோடு தமக்கான சிறப்பு மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர். 09:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய அகவை நிறைவு விழா 19:45 மணிக்குத் தமிழர் தாயகத்தின் விடியலை அடைவோம் என்ற பற்றுறுதியோடு அகமேந்தியவாறு சிறப்புடன் நிறைவுற்றது.
Web to LD -sw 2026 (1)
36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space