நாட்டை விட்டு வெளியேறியிருந்த 370 விசேட வைத்திய நிபுணர்கள் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 06 விசேட வைத்திய நிபுணர்கள் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேலும் 60 முதல் 65 விசேட வைத்திய நிபுணர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 507 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். 

பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்களில் அதிகளவானோர் மீண்டும் நாடு திரும்பிய ஆண்டாக 2026 ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

விசேட வைத்திய நிபுணர்கள் 2020 ஆம் ஆண்டில் 29 பேரும், 2021 இல் 58 பேரும், 2022 இல் 153 பேரும், 2023 இல் 120 பேரும், 2024 இல் 117 பேரும் மற்றும் 2025 இல் 30 பேருமாக ஆறு ஆண்டுகளில் மொத்தமாக 507 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையானது, அக்காலப்பகுதியில் நிலவிய நிலைமையின் பாரதூரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாகும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் குறைவடைந்து, மீண்டும் நாட்டில் சேவையாற்றுவதற்காகத் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை சுகாதார அமைச்சின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான தரவுகள் மூலம் தெளிவாகியுள்ளது.  இந்நிலையில், விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எதன் அடிப்படையில் குற்றம் சுமத்துகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.