சுமார் 6 வருடங்களாகத் தாமதமாக்கப்பட்டு வரும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட ஒருசில கோரிக்கைகளை முன்னிறுத்தி, இலங்கைச் சுங்கத் தொழிற்சங்கச்  கூட்டணி செவ்வாய்க்கிழமை (24) முதல் நாடளாவிய ரீதியில் கருப்புப் பட்டி அணிந்து கடமைக்கு சமூகமளிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகள் 6 வருடங்கள் கடந்தும் முழுமையாகச் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள  நெறுகடிகளுக்கு தீர்வு காணும் நோக்குடனும் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்த தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சுங்க தொழிற்சங்கக் கூட்டணி மேலும் தெரிவிக்கையில், தங்களது இந்தப் போராட்டம் சம்பள உயர்வுக்கானதோ அல்லது மேலதிக சலுகைகளுக்கானதோ அல்லவெனவும், சட்டபூர்வமாகத் தமக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளையே தாம் கோருவதாகவும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்துப் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் 30 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், எவ்விதச் சாதகமான பதில்களும் இதுவரை  கிடைக்கப்பெரவில்லை. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் 15 கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதிகாரிகள் மௌனம் காப்பதாகத் தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சுங்க அலுவலகங்களிலும் அதிகாரிகள் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.  எவ்வாறாயினும், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முதற்கட்டமாக இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், தமது கோரிக்கைகளுக்குப் பலன் கிடைக்காவிடின் அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சு மற்றும் அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினருடன் வியாழக்கிழமை (26) விசேட கலந்துறையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் எட்டப்படும் தீர்மானங்களைத் தொடர்ந்து, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீண்டும் கூடிப் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.