1979ஆம் ஆண்டின் தற்காலிக பயங்கரவாத ஏற்பாடுகள் சட்டம் மூலம் வடக்கில் பாரிய அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர்களே தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில், மீண்டும் அடக்குமுறைச் சட்டமூலமொன்றைக் கொண்டுவருவது வேடிக்கையானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
'குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கிழித்தெறிவோம்' எனும் தொனிப்பொருளில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
1979ஆம் ஆண்டில் தற்காலிக பயங்கரவாத ஏற்பாடுகள் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை அப்போதைய அரசாங்கங்கள் கொண்டுவந்தன. அந்தச் சட்டத்தின் மூலம் வடக்கில் பாரிய அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டதை நாம் கண்டோம். தெற்கிலும் மக்கள் விடுதலை முன்னணி அடக்குமுறைகளுக்கு உள்ளானது.
அந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அரசியல் கோரிக்கைகளில் ஒன்றாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அமைந்திருந்தது. அந்தக் கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தொடர்ச்சியாகப் போராடினர்.
அதேபோன்று, அப்போதைய அரசாங்கங்கள் அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்த முயன்றபோது, அவற்றுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர்களில் முக்கியமானவர்களே இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவ்வாறு அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்களைக் கொண்ட அரசாங்கம், தற்போது அதே தன்மையிலான சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சிப்பது எவ்வாறு நியாயமானதாக இருக்க முடியும்?
கடந்த காலங்களில் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் மக்களை அடக்குவதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தச் சட்டமூலத்துக்கு எதிராகச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நாட்டின் தொழிற்சங்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகத் தென்படுகிறது.
இந்தச் சட்டமூலம் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, ஜனநாயக உரிமைகளுக்காகக் குரலெழுப்புகின்றவர்களை அடக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்தச் சட்டமூலத்தில் காணப்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, நீதிமன்ற உத்தரவின்றி எவரையும் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்படக்கூடிய நிலைமையாகும். ஒருவரைத் தடுத்து வைப்பது தொடர்பான அதிகாரங்கள் இவ்வாறு வழங்கப்படுவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அத்துடன், அரசாங்கத்திடம் ஒன்றைச் செய்யுமாறு கோருவதற்கும், ஒரு விடயத்தைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்துவதற்கும் முடியாத வகையில் சட்டத்தின் வரைவிலக்கணம் அமைந்திருந்தால், அது எத்தகைய சட்டமாக இருக்கும்? இந்தச் சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கணத்தில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன.
அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும் ஜனநாயகச் செயற்பாடுகளாகும். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கருவியாக இச்சட்டமூலம் பயன்படுத்தப்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது.
எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாம் தெளிவாகக் குரலெழுப்புகின்றோம். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய ஓர் அரசாங்கம் மீண்டும் அடக்குமுறைச் சட்டமூலமொன்றைக் கொண்டுவருவது வேடிக்கையான விடயமாகும். இதற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இந்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திலிருந்து மீளப்பெறுமாறு அரசாங்கத்திடம் நாம் தெளிவாகக் கோருகின்றோம். தற்போது இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். நாமும் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
எனவே, மக்களின் ஜனநாயக உரிமைகளையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இந்த அடக்குமுறைச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.