தென்கொரியாவின், இன்சியான் நகரில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் 6 ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை பிரதிநிதிப்படுத்தி விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
இம்மாநாடு கடந்த 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை தென்கொரியாவின் இன்சியான் நகரில், கொரியகக்குடியரசின் துணைப் பிரதமரும் அறிவியல் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சருமான பே கியுங் – ஹூன் தலைமையில் நடைபெற்றது.
தூய்மையான எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்தல், எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் அணுசக்தியின் முக்கிய பங்கு குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதையும், அணுசக்தியை அபிவிருத்தி செய்தல் மற்றும் பயன்படுத்துவது தொடர்பான முக்கிய விடயங்களைப் பகிர்ந்துகொள்வதையும் பிரதான நோக்கமாகக் கொண்டே சர்வதேச அணுசக்தி அமைப்பினால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, இலங்கை பாதுகாப்பான, நம்பகமான, குறைந்த செலவிலான மற்றும் நிலையான மின்சார அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தி வகிக்கக்கூடிய பங்கு குறித்து இலங்கை தற்போது விரிவாக மதிப்பீடு செய்து வருகிறது. இதில் பாதுகாப்பு, அச்சமின்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் என்பன அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், வெறுமனே அணுச்சக்தியை நாட்டில் அறிமுகப்படுத்துவது மட்டும் அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தினார். அணுச்சக்தியைப் பயன்படுத்துவது நாட்டிற்குத் தெளிவான நன்மைகளைத் தருமா என்பதையும், பாதுகாப்பான, நம்பகமான, குறைந்த செலவில் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்ட மின்சார அமைப்பை உருவாக்குவதற்கு அது எந்தளவிற்குப் பங்களிப்பை வழங்கும் என்பதைத் தீர்மானிப்பதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும் என்றார்.
தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணுச்சக்தி தொடர்பான ஆய்வு மற்றும் திட்டமிடல் வேலைத்திட்டங்களுக்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களுக்காக ஒரு நிலையான ஆற்றல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் முறையான தீர்மானம் எடுத்தல், வலுவான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பும் அர்ப்பணிப்பும் நிச்சயம் தொடரும் என்றும் உறுதியளித்தார்.