தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பலகோடி ரூபா ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் சான்றாதாரங்களுடன் முறைப்பாடுகள் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆணைக்குழுவுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை இன்று (29) வியாழக்கிழமை கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ,

தேசிய தொழிற்சங்க மற்றும் சிவில் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட பிரதான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

கொள்கலன் மோசடி, நிலக்கரி இறக்குமதி மோசடி, திறைசேரி நிதி பயன்பாட்டு முறைகேடுகள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 2,500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட இரசாயனப் பொருட்கள் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுத்துமூல ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், 'எக்ஸ்பிரஸ் பேர்ல்' கப்பல் பேரழிவினால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்காக முதற்கட்டமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அந்த நிதியை அறவிட்டுக்கொள்வதில் இடம்பெறும் தாமதம் தொடர்பாகவும் விசாரணை கோரப்பட்டிருந்தது. அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற சான்றுகள் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்காது மெளனம் காத்து வருகிறது.

அதேவேளை, அரசாங்கத்தினால் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள், 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நிலவியது போன்று, இச்சட்டங்கள் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்து நிலவுகிறது. இச்சட்டமூலங்கள் மூலம் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு, சோதனை பிடியாணை இன்றி சந்தேகநபர்களைக் கைது செய்யவும், நீண்டகாலம் தடுத்து வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் "பயங்கரவாதம்" அல்லது "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்" என்பனவற்றுக்கான தெளிவான சட்டரீதியான வரைவிலக்கணங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் தவறுகளையோ அல்லது ஊழல்களையோ சுட்டிக்காட்டும் சிவில் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களின் கருத்துரைகளை "பயங்கரவாதச் செயல்" எனச் சித்தரித்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் தடுத்து வைக்கவோ, கடத்திச் செல்லவோ அல்லது காணாமல் ஆக்கவோ இச்சட்டங்கள் வழிவகுக்கும். உதாரணமாக, மகரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் கடுமையான மருந்துப் பற்றாக்குறை குறித்துச் சிவில் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், வைத்தியசாலையில் மருந்துகள் இல்லாத காரணத்தால் வெளிச்சந்தையில் ஒரு மாத்திரையை 725,000 ரூபாவுக்கும், மற்றொரு மாத்திரையையும் சேர்த்து ஒரு முறைக்கான சிகிச்சைக்கு சுமார் 10 இலட்சம் ரூபாவைச் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அபேக்ஷா வைத்தியசாலையில் நிலவும் இத்தகைய மாத்திரைகள் பற்றாக்குறையால், 4 முதல் 6 முறைகள் வரை சிகிச்சை பெற வேண்டிய ஒரு நோயாளி தங்களின் உயிரைப் பாதுகாக்க சுமார் 60 இலட்சம் ரூபாயைச் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வசதியற்ற நோயாளிகள் இதனால் சிகிச்சை பெற முடியாமல் உயிராபத்தை எதிர்கொள்கிறார்கள்.

திறைசேரியில் போதுமான நிதி இருந்தபோதிலும், சுகாதார அமைச்சும் மருத்துவ விநியோகப் பிரிவும் அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளைக் கொள்வனவு செய்யத் தவறியுள்ளது. இவ்வாறான அரச நெருக்கடிகளையும் ஊழல்களையும் வெளிக்கொண்டுவரும் நபர்களைப் புதிய சட்டமூலங்களைப் பயன்படுத்தி முடக்க அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சிக்கிறது.

எனவே, இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அதற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகமும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் சஞ்சீவ கோரிக்கை விடுத்தார்.