சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த 27 வயதான அனோஜன் சிவராசா என்பவர், சமூக வலைத்தளமான முகநூலில் (பேஸ்புக்) தெரிவித்த கருத்து ஒன்றுக்காகக் கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கத்தின் தலையீடு எதுவும் காரணமாக அமையவில்லை என்றும், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியான முஹம்மது நஷீத்தின் தனிப்பட்ட இராஜதந்திர தலையீடே அவரது விடுதலைக்கு வழிவகுத்தது என முன்னாள் உயர் அதிகாரிகள் குழுவொன்று வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த கடந்த கால அரசாங்கங்களில் உயர் நிர்வாகப் பதவிகளை வகித்த அதிகாரிகள் குழுவொன்றே இத்தகவலை ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.
சவூதி மன்னரின் நெருங்கிய நண்பரான மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னர் அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் மூவர் அடங்கிய குழு சவூதி அரேபியாவைச் சென்றடைவதற்கு முன்னரே, நஷீத்தின் தலையீட்டினால் விடுதலைக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனைக் கேட்ட ரணில் விக்ரமசிங்க, ஆச்சரியத்துடன் நெற்றியை சுருக்கியவாறு, 'ஆச்சரியமான அரசாங்கம் தான்' எனத் தனது வியப்பை வெளியிட்டிருந்தார்.
இலங்கை 2022 ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கவினால் சர்வதேச நிவாரணங்கள் மற்றும் வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் நியமிக்கப்பட்டிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுடனான அந்த நீண்டகால தொடர்பும், சவூதி மன்னருடனான நட்புறவுமே அனோஜனின் விடுதலையில் நஷீத் தீர்க்கமான பங்காற்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.