ஒன்றுகூடி போராட்டம் நடத்துவது இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை நீதிமன்றத்தாலும் நீதிபதிகளாலும் இல்லாதொழிக்க முடியாது என பிரீ லேயர்ஸ்' அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான மைத்ரி குணரத்ன சுட்டிக்காட்டினார்.

விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை இன்று சனிக்கிழமை (24) நேரில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவு தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை அகற்றிவிட்டு செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், இன்று இங்கு இந்த சத்தியாக்கிரகம் தொடர்ந்திருக்க முடியாது. அவ்வாறான உத்தரவு வழங்கப்படவில்லை. ஒன்றுகூடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும், எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும், பேரணி செல்வதற்கும் இந்த நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமைக்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது.

பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் கடந்த 16ஆம் திகதி முதல் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கக் கோரி பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் எந்தவித வன்முறைச் சம்பவமும் இடம்பெறவில்லை என்பதை நீதிமன்றத்துக்கு அறிவித்தோம்.

 

அரசியலமைப்பின் 9ஆம் உறுப்புரையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு நிறைவேற்றப்படுகிறதா என்பதே பிக்குகள் எழுப்பும் கேள்வியாகும். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைதியாக சத்தியாக்கிரகம் நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது.

பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளையும், அவர்களுக்கு ஆதரவாக வரும் மக்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து தானதர்ம நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர்.

நேற்று நீதிமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகளும் சட்ட மாஅதிபர் தரப்பினரும் ஆஜராகியிருந்தனர். அவர்களின் வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் சட்டரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் பிரச்சினை இல்லை என்பதே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு தொடர்பில் ஊடகங்களுக்கு தவறான சட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனால்தான் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் நான் இங்கு வந்து நிலைமையைத் தெளிவுபடுத்துகிறேன். எங்களுக்கு சட்டத்தை மீற வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. பிக்குகளும் மிகவும் அமைதியான முறையிலேயே சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் போராட்டங்களை பலவந்தமாக அகற்றுவதன் விளைவுகள் தொடர்பில் முன்னர் நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மக்கள் போராட்டங்களை ஒடுக்க முயற்சிப்பது இறுதியில் பயங்கரவாத நிலைமைக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என நீதிமன்றத் தீர்ப்பொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான் வேறு மதங்களுக்கு எதிரானவன் அல்ல. வேறு மதங்களுக்கு எதிராக பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் நான் அவர்களுக்காகக் குரல் கொடுத்துள்ளேன். ஆனால் பௌத்த மதத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த மதத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக மக்கள் அஞ்சாமல் முன்வர வேண்டும் என்றார்.