சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஈழத் தமிழரான சிவராசா அனோஜன் இன்று (11.11.2026) முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபிய அதிகாரிகளால் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்ட முகநூல் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக அந்நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம்-17 ஆம் திகதி அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இராஜதந்திர மற்றும் பிற தலையீடுகளைத் தொடர்ந்து ஒக்டோபர்- 14 ஆம் திகதி சவூதி நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்துச் செய்தது.எனினும், ஏனைய தண்டனைகள் நடைமுறையிலிருந்தமையால் அவரை முழுமையாக விடுவிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந் நிலையில் அனோஜனை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதாகச் சவூதி அரேபிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய, அனோஜனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.