அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் துளசி கப்பார்ட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக வெள்ளிக்கிழமை (22) அறிவித்துள்ளார்.
தனது கணவர் ஆபிரகாம் வில்லியம்ஸ் ஒரு அரிய வகை எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு துணையாக இருப்பதற்காகவே தான் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பை ஓவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது விலகல் முடிவை துளசி கப்பார்ட் அறிவித்ததாக 'பாக்ஸ் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இராஜினாமா ஜூன் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
தனது இராஜினாமா கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ள துளசி கப்பார்ட்,
"என் மீது நம்பிக்கை வைத்து, கடந்த ஒன்றரை வருடங்களாக தேசிய உளவுத்துறைப் பணியகத்தை வழிநடத்த வாய்ப்பளித்தமைக்கு ஜனாதிபதி ட்ரம்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனது கணவர் இந்த கடினமான போரை எதிர்கொள்ளும்போது, இவ்வளவு பொறுப்பான, அதிக நேரத்தை கோரும் ஒரு பதவியில் நீடித்துக்கொண்டு அவரை நான் தனியாக விட முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
துளசி கப்பார்ட்டின் விலகலை அடுத்து, முதன்மை பிரதி தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் ஆரோன் லுகாஸ் பதில் பணிப்பாளராகச் செயற்படுவார் என ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அறிவித்துள்ளார்.
லுகாஸ் சிஐஏ அமைப்பின் முன்னாள் அதிகாரியாவார்.
துளசி கப்பார்ட் மிகச் சிறந்த முறையில் பணியாற்றினார் என்றும், தற்போதைய சூழ்நிலையில் அவர் தனது கணவருடன் இருக்க விரும்புவது சரியானது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கணவரின் நோய் நிலைமை இராஜினாமாவுக்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், வெள்ளை மாளிகையினால் அவர் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாக உள்விவகாரங்களை அறிந்த தரப்பொன்று 'ரொய்ட்டர்ஸ்' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளது.
ஈரான் விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய வெளியுறவுக் கொள்கைகளில் ட்ரம்புக்கும் துளசி கப்பார்ட்டுக்கும் இடையே அண்மைய மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் மற்றும் தற்போதைய அமெரிக்க அதிகாரிகள் 37 பேரின் பாதுகாப்பு அனுமதிகளை துளசி கப்பார்ட் இரத்து செய்தமை மற்றும் ஜே.எஃப்.கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை பகிரங்கப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் வெள்ளை மாளிகைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் துளசி கப்பார்ட் திடீர் இராஜினாமா!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space