வழக்கமான பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்கா முழுவதும் முடங்கிய அமெரிக்க விமானப் போக்குவரத்து, படிப்படியாகச் சீரடைந்து வந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை  (15) இரவு வரை விமான அட்டவணைகள் முழுமையாக வழமைக்குத் திரும்பாது என அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) தலைவர் பிரையன் பெட்போர்ட் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு வரை அமெரிக்காவில் 6,400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன், 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. முன்னதாக வெள்ளிக்கிழமை (13) பிறப்பிக்கப்பட்ட 05 மணி நேர விமான நிறுத்த உத்தரவால் 9,200 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு, 7,500 விமான சேவைகள் தாமதமாகியிருந்தன. மேலும், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவிருந்த 875 விமான சேவைகளும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாக FlightAware இணையதளத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமையன்று டெல்டா , யுனைடெட் மற்றும் அமெரிக்கன் எயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது சேவைகளில் சுமார் 25% விமானங்களை இரத்து செய்தன; ஜெட்ப்ளூ (JetBlue) நிறுவனம் கிட்டத்தட்ட 45% விமானங்களை இரத்து செய்தது. விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் எவ்வித மேலதிக கட்டணமுமின்றி வேறு நாட்களில் பயணத்தை மாற்றியமைக்க விமான நிறுவனங்கள் சலுகை வழங்கியுள்ளன.

2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  11 ஆம் திகதி தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்க விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட மிக நீண்ட முடக்கம் இதுவாகும். 

ஆரம்பத்தில் இது சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வெள்ளை மாளிகையின் 'சிச்சுவேஷன் ரூமில்' அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர், ஒப்பந்ததாரரான L3Harris நிறுவனம் ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களில் பொருத்திய புதிய ரூட்டர்களில் ஏற்பட்ட கோளாறால், ஒவ்வொரு 4-5 வினாடிகளுக்கும் 1,000-க்கும் மேற்பட்ட இணைப்பு முயற்சிகள் அனுப்பப்பட்டு 17 கட்டுப்பாட்டு மையங்களின் தரவுப் பரிமாற்றம் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

பழமையான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நவீனமயப்படுத்த 50 பில்லியன் டொலர் நிதி ஒதுக்குமாறு போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி கோரியுள்ளார். இதற்குச் சபாநாயகர் மைக் ஜோன்சன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நிர்வாகத்திடம் பொறுப்புக்கூறல் கோரப்படும் என ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.