அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நேற்று சனிக்கிழமை (14)  இரவு  இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

பனாமா நகரிலிருந்து மியாமியில் தரையிறங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த 'கோபா ஏர்லைன்ஸ்' (Copa Airlines) போயிங் 737 விமானத்தின் இடது இறக்கை முனை, கொலம்பியா புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த 'யு.பி.எஸ்' (UPS) சரக்கு விமானத்தின் (போயிங் 767) முன்பகுதியில் உரசி மோதியுள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையின் அறிவுறுத்தலை மீறி யு.பி.எஸ் விமானம் சற்று முன்னோக்கிச் சென்றதே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் யு.பி.எஸ் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், கோபா விமானத்தின் இடது இறக்கை முனையும் உடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. கோபா விமானத்தில் இருந்த 166 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமானப் போக்குவரத்து முடக்கத்திலிருந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம்  தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.