2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தொகையில் தமிழ் பிரதேச செயலகங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமாகவே கருதுகிறோம்.அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.நல்ல விடயங்கள் பல உள்வாங்கப்பட்டுள்ளன.

சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விடயத்திலும் அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். சுகாதாரம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்பாசனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லையென்றே கூற வேண்டும்.

நாட்டில் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கடமையுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 4 சதவீதம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில் அவர்களின் வாழ்வை கேள்விக்குரியதாக்கக்கூடாது.

எரிபொருள் விலை உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் தமது உற்பத்திகளை சரியான முறையில் விற்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயத்திற்கான ஒதுக்கீட்டை அதிகமாக செய்ய வேண்டும்.

 வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 458 பில்லியன் ரூபா அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விடயங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதை தவிர்த்து நாட்டின் உற்பத்தியில் முக்கிய பங்களிக்கும் விவசாயத்திற்கு அதிகளவில் நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டித்வா புயல், ஏனைய அனர்த்தங்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை மற்றும் எல்- நினோ தாக்கம் போன்றன இருந்தும் நாட்டின் பொருளாதாரம் சாதகமான சூழ்நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற நல்ல விடயங்கள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மிளகாய்,கறுவாடு, சீனி போன்ற பொருட்களுக்கான வரியை குறைத்துள்ளமை பாராட்டக்குரிய விடயமாகும்.

அத்துடன் கல்விக்காக இதில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வியில் மறுமலர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. நகரப் புறங்களில் இருந்து கிராமப்புறங்களை நோக்கி கல்வி வளர்ச்சி நகர்த்தப்படுகின்றது. இது நல்ல விடயமே. அதேபோன்று போக்குவரத்துகள் வீதி அபிவிருத்தி விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகள் குன்றும் குழியுமாக இருக்கின்றன. கடந்த காலங்களில் அங்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை. அந்த பிரதேசங்கள் தொடர்பில் பாகுபாடுகள் காணப்பட்டன.

குன்றும் குழியுமாக வீதிகள் காணப்படுவதால் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயணிக்க முடியாது என்று கூறுகின்றன. இதனால் பாடசாலை மாணவர்களின் இடை விலகல்களும் இடம்பெறுகின்றன. நீங்கள் பாதைகளை சரியாக திருத்தினால் அந்த மாணவர்களின் கல்லி நிலை உயர்த்தப்படும்.

இந்த வரி விடயம் மிக முக்கியமான பார்க்க வேண்டியுள்ளது. 7 வீதத்தில் இருந்து 15 வீதமான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை பாதகமான சூழ்நிலையாகவே பார்க்கின்றோம். வரி வருமானத்திற்காக இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்கள் மீது சுமத்தப்படும் வரியாகவே இது உள்ளது. நேரான வரியாகவும், நேரில் வரியாகவும் அறவிடப்படுகின்றது. நாட்டில் 35 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தை வறுமை குறைக்க என்ன திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேலை வாய்ப்பு விடயத்தில் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதென்றால் முதலீடுகளை கொண்டு வர வேண்டும். ஆனால் முதலீடுகளை கொண்டு வருபவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்தால் எவ்வாறு எமது இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவது.

இதனால் சரியாக முதலீட்டாளர்களை உள்வாங்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக கூறுகின்றீர்கள். அந்த நிதியில் எங்களின் பிரதேச செயலகங்களுக்கு எவ்வளவு தொகைகள் ஒதுக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.