மூத்த தமிழ்த்தேசிய அரசியல் தலைவரும், வல்வெட்டித்துறை நகர பிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (14.11.2026) தனது- 69 ஆவது வயதில் காலமானார்.

சிவாஜிலிங்கத்தின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜீன் மாதம்-11 ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சில வாரங்களாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்துக் கடந்த மாதம்-24 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள  தனியார் மருத்துவமனையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்றார். இதன் பின் இம் மாதம்-02 ஆம் திகதி  திங்கட்கிழமை சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை திடீரென மீண்டும் மிகவும் மோசமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.  

1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்-15 ஆம் திகதி யாழ். வல்வெட்டித் துறையில் பிறந்த சிவாஜிலிங்கம் 1951 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி முதற்தடவையாகப் நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் 9662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.  

2010 நாடாளுமன்றத் தேர்தலில் இவரைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனது வேட்பாளர் பட்டியலில் இணைக்கவில்லை. இதனையடுத்து இவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்தும் (ரெலோ), தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் விலகித் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். மேற்படி கூட்டமைப்பின் சார்பில் இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2011 யூன் மாதத்தில் தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் ரெலோ மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.

சிவாஜிலிங்கம் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வல்வெட்டித்துறை நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 மாகாணசபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினரானார். வடக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பதவிப் பிரமாணத்தை அவர் முள்ளிவாய்க்கால் மண்ணின் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டமை ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.  2015 பாராளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சைக் குழுவொன்றில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் எந்த இடங்களையும் பெறவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் கட்சியின் அமைப்பாளர் உட்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்-03 ஆம் திகதி விலகினார்.அதே மாதம் இடம்பெற்ற ஐனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிப் போட்டியிடுவதாகக் கூறி ரெலோக் கட்சி நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலேயே அவர் கட்சியிலிருந்து விலகினார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றில் மீண்டும் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் 12, 256 வாக்குகள் பெற்றிருந்தார் .இந்த ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரெலோக் கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக யாழ்.மாவட்டக் கிளை பொது வேட்பாளராகக் களமிறங்கிய சிவாஜிலிங்கத்தை ஆதரித்ததுடன் அவருக்கு ஆதரவான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. இதனையடுத்து ரெலோவின் தலைமைக் குழு எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அமையக் கட்சியின் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்து வந்த மூத்த சட்டத்தரணி என்.சிறீகாந்தா  உட்படச் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன்பின்னர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-02 ஆம் திகதி யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் என்.சிறீகாந்தா அறிவிப்பொன்றை வெளியிட்டார். இதற்கமைய, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-15 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.நல்லூரில் வைத்து மூத்த சட்டத்தரணி  என். சிறீகாந்தா உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டார்.  இந்தக் கட்சியின் தலைவராக என்.சிறீகாந்தா நியமிக்கப்பட்டதுடன் கட்சியின் பொதுச் செயலாளராக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டு உயிரிழக்கும் வரை அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடித்து வந்தார்.  

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கம் யாழ்.மாவட்டத்தில் மீண்டும் போட்டியிட்டார். எனினும், குறித்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகவில்லை. தேர்தல் தோல்விக்குப் பின்னரும் அவர் தமிழ்த்தேசிய அரசியலில் சோர்வின்றித் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தார்.

2025 ஆம் ஆண்டு சிவாஜிலிங்கத்தின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. நீண்டகால நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை அரசியல் அனுபவத்தைக் கொண்டிருந்த அவர் மீண்டும் தனது சொந்தப் பிரதேசமான வல்வெட்டித்துறை நகரசபை அரசியலில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நகரசபை உறுப்பினராகப் பதவியேற்றார். பின்னர் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்- 28 ஆம் திகதி நடைபெற்ற தவிசாளர் தெரிவில் ஏழு வாக்குகளைப் பெற்று வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளராகத் தெரிவானார். உயிரிழக்கும் வரை அந்தப் பதவியிலும் தொடர்ந்தார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மையாரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். போருக்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலை, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஏற்பட்ட பிரிவு ஆகியவை பெரும் துயரத்தை ஏற்படுத்தின. இந் நிலையில் சிவாஜிலிங்கம் பிரபாகரனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்தார். 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-06 ஆம் திகதி பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொடை இராணுவ முகாமில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தபோது உயிரிழந்தார். இதனையடுத்து வேலுப்பிள்ளையின் உடலைப் பொறுப்பேற்று அவரது இறுதி அஞ்சலி  நிகழ்வுகளை முன்னின்று நடாத்தி வைத்தார். இதன்பின் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மையாரைப் பராமரிக்கும் பொறுப்பையும் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்வதி அம்மையார் வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் காலமான நிலையில் அம்மையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளையும் சிவாஜிலிங்கம் முன்னின்று நடாத்தினார்.  

2014 ஆம் ஆண்டு சிவாஜிலிங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றன. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம்- 10 ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புடைய இராஜதந்திரிகளிடம் அவர் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் இலங்கையின் இறுதிப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமது உறவினர்களின் நிலை குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரித் தொடர்ப் போராட்டங்களில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்குப் பொறுப்பான பதில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. சிவாஜிலிங்கம் இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தார். அதேபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் மற்றும் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகளில் அவர் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வந்தார்.  

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வல்வெட்டித்துறையில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் நினைவுகூரலுடன் தொடர்புடைய நிகழ்வில் சிவாஜிலிங்கம் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அவர் உட்படுத்தப்பட்டார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையுடன் தனது இறுதிக் காலத்தில் நெருங்கிய தொடர்பைச் சிவாஜிலிங்கம் பேணினார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரவையாக இணைந்து செயற்படுவதில் பல முக்கிய ஆலோசனைகளைச் சிவாஜிலிங்கம் வழங்கினார்.            

யுத்தம் ஓய்ந்து பல வருடங்களாகியும் வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலும் சிவாஜிலிங்கம் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அதற்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாகத் தையிட்டிச் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களில் சிவாஜிலிங்கம் பல தடவைகள் நேரடியாகக் கலந்து கொண்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் சிவாஜிலிங்கம் நேரடியாகக் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.    

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவாஜிலிங்கம் வாழ்ந்து வந்த வல்வெட்டித்துறை இல்லத்துக்கு நேரடியாகச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரது மனைவியிடம் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர். பின்னர் எதிர்வரும்-18 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சிவாஜிலிங்கத்தை முன்னிலையாக வேண்டுமெனவும் அழைப்பாணை வழங்கிச் சென்றமை பலத்த கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  


                           

                   ,