மின்வெட்டு எப்போது நிறுத்தப்படும் என்று எவருக்கும் தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை நாட்டில் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். 

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் அற்ற நிரப்பு நிலையங்களையும் நீண்ட வரிசைகளையும் இன்றும் பரவலாகக் காண முடிகிறது. 

மேலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதால், தோட்டப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

ஆற்றல் நெருக்கடிக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கத் தவறிய அரசாங்கம், மக்களின் பட்டினியை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

நேரடியாக அந்நிய முதலீடுகள் நாட்டிற்கு வருவதாக அரசாங்கம் கூறினாலும், கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்திருந்த சீன முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைக் கைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு டொலர்களில் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையும் உருவாகியுள்ளதுடன், இதனால் நாடு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இத்தகைய போக்கிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. 

இந்த எதிர்ப்பை வெறும் ஆர்ப்பாட்டங்களோடு நிறுத்தாமல், அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் மக்களையும் ஒருங்கிணைக்கும் பரந்த அளவிலான வேலைத்திட்டத்தை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பௌத்த துறவிகளின் விவகாரங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமை மனிதர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ கிடையாது எனவும், அது சாசன சம்பிரதாயங்கள் மற்றும் சங்க சபைகளினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்தார்.

அதேபோல், 'பச்சைக்குத்தல்'  குத்துவது போன்ற விடயங்களை பழைய இடதுசாரி சிந்தனைச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அடிப்படை உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், அடிப்படை உரிமைகளை மதிக்காத எந்தவொரு அரசியல் இயக்கமும் நிலைத்து நிற்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச சூழல் காரணமாக, மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு மக்கள் போராட்டம்  வெடிப்பதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், சுற்றாடலும் வனவிலங்குகளும் தற்காலிக ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி, பிறக்கவிருக்கும் எதிர்கால சந்ததியினருக்குமே சொந்தமானவை என்பதால், சுற்றாடல் மீது அன்பும் உணர்வுத்திறனும் கொண்ட அரசியல் இயக்கங்களால் மட்டுமே வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க முடியும் எனவும் புத்திக பத்திரண மேலும் தெரிவித்தார்.