நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை வியாழக்கிழமை (22) மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டமிட்ட மின்வெட்டுகளை முழுமையாக நீக்க வாய்ப்புள்ளதாகவும் தேசிய அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (17) தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது. தற்போதைய ஏற்பாடுகளின்படி இன்று புதன்கிழமையும் (21) திட்டமிட்ட மின்வெட்டு தொடரும்.

இருப்பினும், நாளை முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளது. 

திட்டமிட்டபடி இதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டால், மின்வெட்டுக்கான தேவை இல்லாமல் போகும் என துறைசார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.