இன்று இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கம் அபிவிருத்தியோ அல்லது வேறு எந்த விடயமோ அல்ல. பௌத்த சாசனத்திற்குரிய மரபுரிமைகளை அழிப்பதே அதன் நோக்கமாக இருக்கின்றது. பௌத்த மரபையும் அதன் பாரம்பரியக் கட்டமைப்பையும் சீர்குலைப்பதையே அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. இதன் காரணமாகவே பௌத்தர் அல்லாத ஒருவரை புத்தசாசன அமைச்சராக நியமித்துள்ளதாக உலபனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

தற்போது அரசாங்கம் ஒருபுறம் பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்து ஜனநாயகத்திற்கான வாய்ப்புகளை மூடிவருகின்றது. இதன்மூலம் தனது சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்தி வருகின்றது. இந்த நாட்டுக்கு வரலாற்று ரீதியாக உரித்தான மரபுரிமைகள், விடுதலைப் புலிகள் புலம்பெயர் தரப்பினரின் தேவைக்கேற்ப பறிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

இன்று இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கம் அபிவிருத்தியோ அல்லது வேறு எந்த விடயமோ அல்ல. பௌத்த சாசனத்திற்குரிய மரபுரிமைகளை அழிப்பதே அதன் நோக்கமாக இருக்கின்றது. இதற்காகப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமது தன்னிச்சையான அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்காக, முதலில் பௌத்த மரபையும் அதன் பாரம்பரியக் கட்டமைப்பையும் சீர்குலைப்பதையே அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. இதன் காரணமாகவே பௌத்தர் அல்லாத ஒருவரை புத்தசாசன அமைச்சராக நியமித்துள்ளது.

புத்தசாசன அமைச்சராகக் கூறப்படும் குறித்த அமைச்சரின் கருத்துகளையும் செயற்பாடுகளையும் ஆராயும்போது இந்த விடயம் தெளிவாகப் புரிகின்றது. அவர் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், புத்தசாசன அமைச்சு என்ற ஒன்று இல்லை என்றும் அது நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

அத்துடன், கலாசாரத்துக்குப் பொறுப்பான பிரதி அமைச்சராக மௌலவி ஒருவரை நியமித்துள்ளமையும் கவனத்துக்குரியதாகும். அமைச்சர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பொறுப்புகளை வழங்குவதற்கு தாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் கலாசாரம் தொடர்பான பொறுப்புகளை வழங்கும்போது அந்தக் கலாசாரம் குறித்து போதிய புரிதலும் உணர்வும் அக்கறையும் கொண்ட ஒருவருக்கே அவற்றை வழங்க வேண்டும்.

கலாசாரம் தொடர்பான முழுமையான பொறுப்பு இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குவதாக இருந்தால், அந்தத் துறையின் தன்மையையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் புரிந்துகொண்ட ஒருவரை நியமிப்பதே பொருத்தமானது. அவ்வாறு செய்யாமல், அமைச்சர்களின் நியமனங்கள் ஊடாக பௌத்த சாசனத்தின் மீது மறைமுகமாகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.

பௌத்த சாசனத்தின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது நாட்டின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதுடன் தொடர்புடையது. எனவே, அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சுப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டுக்கு வரலாற்று ரீதியாக உரித்தான மரபுரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.