நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் வியாழக்கிழமை (29) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த ஒருநாள் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

உயர்கல்வித் துறையைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமை தொடர்பில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்த வேலைநிறுத்தத்தின் போது பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைதியான முறையில் நடைபவனி ஒன்றும் பின்னர் கருத்தரங்கொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.