அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காதது ஏன்? அரசியல் கைதிகள் தமிழர்கள் என்பதற்காகவா இந்தப் புறக்கணிப்பு இடம்பெறுகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரால் இன்று வியாழக்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம்" எனும் வாக்குறுதியோடு பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கு எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் எனும் போலி குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்து மேலதிகமாக நான்கு வருட காலத்தையும் இந்தியாவிலேயே கழித்துவிட்டு இலங்கை வந்த ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு; இது தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்படும் பயங்கரவாத கைது அச்சுறுத்தல் என்றே சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
வடக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டு பத்து வருட தண்டனையை பெறுகின்றார். அவரின் நன்னடத்தை அல்லது வேறு காரணங்களுக்காக தண்டனை காலம் 7 ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டது .அதனை முறையாக கழித்ததன் பின்னர் 4 ஆண்டுகள் முகாம் வாழ்வினைத் தொடர்ந்து குடும்பத்தோடு இணைய இலங்கை திரும்பிய போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இக் கைது ஏன்? இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் நீதி மன்றத் தீர்ப்பிலும் தண்டனையிலும் நம்பிக்கை வைக்கவில்லையா? அல்லது இந்தியாவின் ஆலோசனையில் இலங்கை அரசாங்கம் மீண்டும் தண்டனை வழங்க முற்படுகின்றதா? என்றே கேட்கின்றோம்.
சமூக விரோத குற்றச் செயல்களில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் விசாரணையின் பின்னர் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் ஞானசார தேரரின் காவி உடை தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக புதிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டு சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்தியிருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? அரசியல் கைதிகள் தமிழர்கள் என்பதற்காகவா?
மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போது அரசியல் கைதிகள் தங்கள் விடுதலுக்காக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்கள் மேற்கொண்டதையும்,வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிகழ்ந்த தொடர் பாரிய கடையடைப்பு போராட்டங்களையும் நன்கு அறியும். அக்காலகட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியை அவர்களின் பெலவத்தை பணிமனையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் சந்தித்து உரையாடியதோடு அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது. ஆனால் அதனை செய்ய துணிவில்லை.அதுவும் அவர்களின் அரசியல்.ஆனால் அதே கட்சியினர் தங்களின் போலி அரசியலுக்காகவும் தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காகவும் அரசியல் கைதிளின் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழர் பிரதேசங்களில் தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள் இப்போது கொடுத்த வாக்குறுதியை தங்கள் அரசியல் கால்களுக்கு கீழே போட்டுள்ளதை அவர்களின் அரசியல் தோல்வியாகவே நாம் கருதுகின்றோம்.
பாரிய இனப்படுகொலையுடன் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை இலக்கியங்களாக்கி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முற்படுவதை ஏற்க முடியாத தற்போதைய ஆட்சியாளர்கள் அதனை சுங்க திணைக்களத்தில் தடுத்து வைத்திருப்பதோடு; தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரத்தின் பின்னர் பல்வேறு தரப்பினரை விசாரணைக்கு அழைப்பதும், மாவீரர் நாளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் நிலையெனவே நாம் நினைக்கின்றோம்.
தேசிய தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு துறைமுகம் அமைப்போம், தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் அவரின் பெயரில் மண்டபம் அமைப்போம் என பாட்டு பாடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இப்போது நூல்களைத் தடை செய்தும், தண்டனை கைதிகளுக்கு மீண்டும் தண்டனை கொடுக்க நினைப்பதும், விசாரணை இழுத்தடித்து பயங்கரவாத முகம் காட்டி தமிழர்களைத் தீண்ட நினைப்பது ஏன்?
எதிர் வரும் மாதத்தில் மக்கள் விடுதலை முன்னணியர் 1988/89 காலகட்டத்தில் அக்கால அரசாங்கத்திற்கு எதிரான தாங்கள் செய்த புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் சுதந்திரம் மற்றும் வடக்கு கிழக்கில் தங்களின் அரசியல் இலட்சியத்திற்காக உயிரை தியாகம் செய்து மாவீரர்களானோரின் உறவுகளுக்கு உண்டு என்பதை ஏற்க வேண்டும் .அதை விடுத்து அவர்களின் நினைவேந்தலை பயங்கரவாதமாக்கி நினைவேந்தும் உரிமையினை தடுக்கவோ, தடைகளை ஏற்படுத்தவோ, அச்சுறுத்தல் விடுக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஆட்சியாளரைக் கேட்டுக் கொள்கின்றோம்.