உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (06) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சகல எதிர்க்கட்சிகளுக்கும், சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இவ்வாரப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து சுதந்திரங்களையும் ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலத்திற்கு எதிராக, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இது குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறது. இது மக்களின் அனைத்து உரிமைகளையும், தொழிற்சங்க உரிமைகளையும், பேச்சுரிமை மற்றும் அரசியல் சுதந்திரத்தையும் முற்றிலுமாக முடக்கக் கூடிய ஒரு சட்டமாகும்.
இது முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பிரச்சினையாகும். எனவே, நாட்டை அழிவுக்குள்ளாக்கும் இச்சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் எமது கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய இதில் பொதுஜன பெரமுனவின் அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என அனைவரும் பங்கேற்பார்கள்.
அதற்கான தீர்மானத்தை கட்சி உத்தியோகபூர்வமாக எடுத்துள்ளது என்றார்.