வடக்கு கடல் பரப்பில் கடந்த 10 தினங்களுக்கு  மேலாக பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களின் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கை காரணமாக எமது மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியில்  இழப்பு    ஏற்பட்டுள்ளதாகவும்,இந்த மீனவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பு கூறுவது என  வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்  செயலாளர் என்.எம் ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் இருக்கின்ற, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மீனவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக   ஊடக வாயிலாக விடயங்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது.

குறிப்பாக நாங்கள் இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாக தொடர்ந்து நீண்ட காலமாக பேசி வருகின்ற விடயங்களுக்கு அப்பால், தொடர்ச்சியாக இந்த 10 தினங்களுக்குள் மன்னார் மாவட்டமும் சரி, யாழ் மாவட்டத்திலும் இருக்கின்ற மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.

இந்திய மீனவர்கள் என்று நாங்கள் சொல்லும் போது, தமிழக மீனவர்கள் மாத்திரமல்ல, இப்போது பாண்டிச்சேரி, காரைக்கால் மீனவர்களும் எங்களது கடல் வளத்தை நோக்கி வருகை தருவது மாத்திரமல்லாமல், அதனை சீரழித்து அள்ளிச் சென்று, இங்கு இருக்கின்ற மீனவர்களின் வலைகள், அதன் உபகரணங்களை நாசமாக்கிய சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டு இருக்கிறது.

அண்மையில் கூட ஒரு குரல் பதிவாக ஒரு மீனவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே,இவ்வாறான நிகழ்வுகள் நடந்திடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஏனெனில்,இவ்வாறு நிகழ்வு இரண்டு நாட்டுக்கும் அல்லது இரண்டு உறவுகளுக்குமான உறவை துண்டிக்க செய்துவிடும் என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கிறோம்.

எனவே, இந்த விடயத்திலே அண்மையில் நடந்த விடயங்களை நான் முன் கொண்டு வருவதாக இருந்தால், மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் இருந்து தொழிலுக்குச் சென்ற    65 மீனவர்களில் 30 பேருடைய வலைகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு படகுக்கு 5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.அதற்கப்பால், வாங்காலைப்பாடு,   காட்டாஸ்பத்திரி என்று சொல்லக்கூடிய பேசாலை மீனவ சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கூட இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.ஆனால்,  தொடர்ந்து நாங்கள் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. 

கடற்படையும் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சாட்டுக்காக என்று சொல்கிற மாதிரி ஒரு படகை கைது செய்தால் மாத்திரம் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது. எங்களது கடல் எல்லையை பாதுகாக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் தொடக்கம் மன்னார் வரைக்கும் இவ்வாறு  மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்ட சம்பவம் இந்த 10 நாட்களுக்குள் கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு இருக்கின்றன, நாசமாக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கப்பால், முல்லைத்தீவில் சீசன் தொடங்கியிருந்த ரால் சீசனுக்காக இப்போதே இந்திய மீனவர்கள், காரைக்கால் மீனவர்கள் அங்கே வருகை தந்து வண்ணம் இருக்கிறார்கள். 500-க்கு மேற்பட்ட படகுகளை தாங்கள் கண்டதாக அங்கு இருக்கின்ற மீனவ சமூகம் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எனவே, இந்த சூழலில்,   அண்மையிலே இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்ததும், அதற்கப்பால் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தையும், தனது ஆலோசனையும் முன் வைத்ததையும் தாண்டி, அதனை மதிக்காத வகையில் இங்கு இருக்கின்ற இந்திய மீனவர்கள் என்று சொல்லக்கூடிய காரைக்கால் மீனவர்களும், தமிழ்நாட்டு மீனவர்களும் தாங்கள் நினைத்தவாறு, தாங்கள் கையாளும் விடயத்தை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். அங்கு யாரையும் அவர்கள் மதிப்பதும் இல்லை.

எனவே, சட்டத்தை மதிக்கக்கூடிய அங்கு போலீஸ்காரர் கூட அதை சொல்கிறார்கள் எல்லையை தாண்டி செல்லாதீர்கள், அங்கு இருக்கின்ற பிரச்சனைகளை அவர்கள் வெளிக்கொண்டு வந்தாலும், அந்த மீனவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.எனவே, தயவுசெய்து நாங்கள் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம், எங்கள் கடல் எல்லைக்குள் வராதீர்கள். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இழப்புக்கு யார் அந்த மீனவர்களுக்கான இழப்பை ஈடு செய்வது என்பதில் கேள்வியாக இருக்கிறது.

அவர்களின் பல குடும்பங்கள் இன்று கண்ணீரோடு வாழ்கிறார்கள். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவருடைய தாய்   ஊடகங்கள் ஊடாக தனது கருத்தை முன் வைத்தார். தீபாவளியை கொண்டாட இருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக.

அவர் அந்த தீபாவளியை மாத்திரம் கனவு கண்டு கொள்கிறாரே தவிர, இங்கு இருக்கின்ற மீனவர்கள் தொடர்ந்து வருடங்களாக தங்களது வாழ்வாதாரத்தையும், தங்களது தொழிலையும் இழந்து வருவதை யாரும் கண்டுகொள்வதோ அல்லது அது தொடர்பான கருத்தை கூறுவதற்கு முன்வருவதில்லை.

இதனையும் தமிழக மீனவர்களும் சரி, அங்கு இருக்கின்ற மக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் எங்களது எல்லையை தாண்டி வந்தால் மட்டுமே, அதுவும் எங்களது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளித்தால் மட்டுமே கடற்படை கைது செய்கிறது. இந்த கைதுக்கு கூட நியாயமான காரணங்கள் இருக்கின்றன.கடல் எல்லையை தாண்டுவது வேறு, எமது கரையை நோக்கி வந்து மீன் பிடிப்பது என்பது வேறு. எமது கரை வரைக்கும் வந்து அவர்களின் தொழில் வலைகளையும் அறுத்து, அதை நாசப்படுத்தும் போது எவ்வாறு நாங்கள் பொறுமையாக இருப்பது?

கடற்படைக்கு கூட ஒரு பொறுப்பு இருக்கிறது; வெறுமனே ஒரு பட கையோ அல்லது ஒரு செயற்பாட்டை செய்துவிட்டு, அதை கொக்கரிக்கிறது போல திரைப்படங்களில் காட்சி காண்பிப்பது போல காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான படகுகள் எங்கள் எல்லையை தாண்டுகிறது. ஒரு படகை கைது செய்து நாங்கள் கைது செய்து விட்டோம் என்பதை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாட்டால் நாங்கள் தூக்கப்பட்டு கொண்டே இருக்கின்றோம். எனவே, அந்த மீனவரின் குரல் நீங்கள் அதை, அவரது குரல் பதிவை  நியாயம் ஆக்கி விடாதீர்கள்.ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். எனவே,இவ்வாறான செயற்பாட்டிற்கு எங்கள் வட பகுதி மீனவர்களை நீங்கள் ஆளாக்கி  விடாதீர்கள். நாங்கள் உறவைப் பேணுகிறோம், நியாயமாகக் கூறுகின்றோம். எனவே, எங்கள் கடல் எல்லையை தாண்டாதீர்கள்.

இதற்கப்பால் நாங்கள் அண்மையில் கடலில் காணாமல் போன, முல்லைத்தீவை சேர்ந்த மூன்று மீனவர்கள் நிலை இன்று வரை தெரியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பம் இன்னும் வேதனையை பதிவு செய்கிறார்கள்.  அவர்களை மீட்டெடுப்பதில் கூட இலங்கை கடற்படையும் ஈடுபட்டிருந்தாலும், அங்கு இருக்கின்ற மீனவ சமூகம் ஈடு பட்டு இருந்தாலும், இன்று வரை அந்த குடும்பம் கண்ணீரில் தான் இருக்கிறது.

எனவே, இதை நாங்கள் பரவலாக எல்லா சர்வதேச மட்டங்களுக்கும் கொண்டு சென்று அந்த மீனவர்களின் நிலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும், அவர்கள் குடும்பங்களோடு அவர்கள் இணைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். 

அந்த செயற்பாட்டில் அனைவரும் இணைந்து, அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும், அந்த குடும்பத்தோடு அந்த உறவுகள் சேர வேண்டும் .எனவே, தயவு கூர்ந்து அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற இழப்பு பல கோடிகள். 

எனவே, இந்த மீனவர்களுக்கு அடுத்த கட்டம் இந்த அரசு என்ன செய்யப் போகிறது? தொடர்ந்து இதை அனுமதிக்க போகின்றதா? இவ்வாறான இழப்பை அவர்கள் தொடர்ந்து தங்களது வாழ்வை இழக்க வேண்டிய நிலை, இழக்க வேண்டிய நிலையில் தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்களிடம் இருக்கிறது.

எனவே, அரசு உடனடியாக இந்த செயற்பாட்டிற்கான இழப்பீடு  வழங்க வேண்டும்.  , அவர்களிடம் நாங்கள் சொல்கின்றோம், இந்த செயற்பாட்டை நீங்கள் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்கிறார்கள் என்றால் கூட, அவர்கள் தொடர்ந்து 10, 15 வருடம் நாங்கள் முறைப்பாட்டைத்தான் பதிவு செய்கிறோம், ஆனால் எந்த இழப்பும் இந்த மக்களுக்கு கிடைத்ததாக இல்லை.

எனவே தயவு கூர்ந்து அரசு தனது பொறுப்பை உணர்ந்து, கடற்படையும் தனது பொறுப்பை உணர்ந்து, இந்த வடபகுதி மீனவர்களுக்காக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..என அவர் மேலும் தெரிவித்தார்.