ஆபிரிக்க நாடான சாட்டில் தண்ணீர் பிரச்சினைக்காக இரு இனக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது பலர் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதில் சுமார் 25 பேர் உயிரிழந்ததோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சாட் நாட்டில் சமீப காலமாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அங்குள்ள மக்கள் தொடர்ந்து முகங்கொடுத்து வருவதோடு, இப்பிரச்சினைகளால் அடிக்கடி மோதலும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (30) கிரெடா, குக்கா ஆகிய இரு சமூகங்களுக்கிடையே தண்ணீர் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. 

அன்றைய தினம் கிரெடா இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது கால்நடைகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள குளமொன்றுக்கு கால்நடைகளை கொண்டுசென்றுள்ளார். 

அவ்வேளை அக்குளத்துக்குச் சென்ற குக்கா இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், குளத்து நீரை பயன்படுத்துவது தொடர்பில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், இரு இனங்களைச் சேர்ந்த பலர் அவ்விடத்தில் ஒன்று கூடி மோதிக்கொண்டபோது பலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்ததாகவும் 22 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர், விடயமறிந்து பாதுகாப்புப் படையினர் குறித்த இடத்துக்குச் சென்று செயற்பட்டதில் மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.