பாகிஸ்தானின் கிழக்கு நகரமான சியால்கோட்டில் பிரபல டிக்டொக் பிரபலம் ஒருவரின் திருமண நிகழ்வின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (31) மாலை, தஸ்கா வீதியில் அமைந்துள்ள பராஸ் கிரிக்கெட் மைதானத்தில் டிக்டொக்கில் “Mr. Pattlo” என அறியப்படும் அன்சார் மஹ்மூத்தின் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். இதனால் பெருமளவிலான மக்கள் நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

விழாவின்போது ஒலிபெருக்கி மூலம் ஒரே நேரத்தில் அனைவரையும் மைதானத்திற்குள் நுழையுமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களை நிகழ்வுக்கு அழைத்த முக்கிய நபரான டிக்டொக் பிரபலம் அன்சார் மஹ்மூத் தலைமறைவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மைதானத்தின் உரிமையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறித்த டிக்டொக் பிரபலம் மற்றும் 40 முதல் 45 வரையான பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்ட ஒன்பது அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீதும், அடையாளம் தெரியாத சிலர் மீதும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.