ஆப்கானிஸ்தானில் இன்று (01) வியாழக்கிழமை காலை 5.3 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சி தொடர்பான தகவல்களை இந்திய தேசிய நில அதிர்வு மையம் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 6.59.20 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சிபதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வட-வடமேற்கே சுமார் 165 கிலோமீற்றர் தொலைவில், 35.981° வடக்கு அட்சரேகை மற்றும் 68.700° கிழக்கு தீர்க்கரேகையில் பூமியதிர்ச்சியின் மையப்புள்ளி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி பூமிக்கு அடியில் சுமார் 126 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

பூமியதிர்ச்சி ஆழமான பகுதியில் ஏற்பட்டுள்ளதால், ஆரம்பகட்ட தகவல்களின்படி உடனடியாக பாரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.