இதையடுத்து அவரது உடல் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த தோழருக்கு மார்க்சிஸ்ட் தோழர்கள் அஞ்சலி.
இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு, நல்லகண்ணுவின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானம் வழங்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நல்லகண்ணு தனது 101-வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலன் இல்லத்தில் அஞ்சலி செலுத்தும் தொண்டர்கள்...
நல்லகண்ணுவின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், “மதிப்புக்குரிய நல்லக்கண்ணுவின் மறைவு செய்தி கேட்டு ஆறாத் துயரமடைந்தேன். அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி: மறைந்த நல்லகண்ணு, அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்கு குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் இருக்கும்.
கனிமொழி எம்.பி. இறுதி மரியாதை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: நல்லகண்ணுவின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும். கிட்டத்தட்ட 9 தசாப்தங்களாக, அவர் நீதி மற்றும் கண்ணியத்துக்காக உறுதியுடன் நின்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.