தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஆகவே தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த பூகோள அரசியலை மையப்பாடாக கொண்டு தமிழர்கள் முடிவுகளை எட்ட வேண்டும் என்பதுடன், தமிழ்களின் இனத்துக்காக குரல் கொடுக்க கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (24.11.2026) வவுணதீவு கன்னங்குடா மாணிக்க பிள்ளையார் ஆலய பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி வீரகாவியமாகிய மாவீரர் செல்வங்களை போற்றி வணங்குவதற்கான ஒரு மாதம் நவம்பர் மாதம்.

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள தேசத்தினால் நினைவேந்தல் மறுக்கப்பட்டு தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு பாரிய கட்டமைப்பு ஊடாக இனழிப்புக்குட்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து தமது உரிமைக்காக போராடிய மக்களை ஒரு அடக்குமுறைக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அரசாங்கங்களும் மாறி மாறி வருகின்ற போது வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெற்று அவர்களின் உரிமைகளை பெற்று எல்லாவற்றையும் செய்து வருகின்றோம், எல்லாம் செய்வோம், வாழ்வதற்கு உரித்தான காணி விடுவிப்போம், மானியம் நஷ்டஈடு வழங்குவோம் என ஆட்சியை பிடித்து அரியாசனம் ஏறியதும் அவர்களின் உண்மையான முகத்தை காட்டுவார்கள்.

அந்த நிலை தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழ்ர்களின் வரலாற்றில் தமிழர்கள் ஏமாந்ததை தவிர தமிழர்களின் உரிமைக்காக எந்த சலுகைகளையும் பெற்றதில்லை.

அதேவேளை சிங்கள தேசத்தினுடைய அந்த பௌத்த மேலாதிக சிந்தனை, இனவாத சிந்தனை, தொடர்ந்தும் எம் தேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டு தொடர்ந்து இனழிப்புக் உட்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.