பத்தேகம, வவுலகல பகுதியில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி பத்தேகம, வவுலகல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மற்றும் இரு பெண்கள் மீது காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும் உயிரிழந்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸாரும் எல்பிட்டிய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த குற்றச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, பூஸா, கெகில்ல மண்டிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய லத்து கோலித யசரத்ன டி சொய்ஸா மற்றும் தொடந்தூவை, சுடுமெட்டிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வதுதுர புத்தி மதுஷங்க குணசிரி ஆகிய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தகவல் வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்கள்
- பத்தேகம பொலிஸ் பொறுப்பதிகாரி: 071-8591480
- பத்தேகம பொலிஸ் நிலையம்: 091-2292222
சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைக்கும் தகவல்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

