இஸ்ரேலின் 26 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மதன் கஹானாவை (Matan Kahana) பரிந்துரைக்க காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
காடி ஐசன்கோட் தலைமையிலான யஷார் கட்சி, நப்தாலி பென்னட்டின் பி'யஹாட் (B'Yachad) கூட்டணி, யாயிர் கோலனின் ஜனநாயகக் கட்சி, அவிக்தோர் லிபர்மேனின் இஸ்ரேல் பெய்டெய்னு கட்சி மற்றும் யாயிர் லபிட்டின் யெஷ் அதிட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யஷார் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள மதன் கஹானா, சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் இஸ்ரேல் பெய்டெய்னு கட்சியின் தலைவருமான அவிக்தோர் லிபர்மேனை, பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் குழுவின் தலைவராக நியமிக்கவும் கூட்டணித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற இஸ்ரேல் பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 ஆசனங்களையும், காடி ஐசன்கோட்டின் யஷார் கட்சி 21 ஆசனங்களையும் பெற்றன.
120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எந்தவொரு அணிக்கும் தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்கள் கிடைக்கவில்லை.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், நெதன்யாகுவுக்கு எதிரான அரசியல் அணிகள் பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தப் பின்னணியில், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் முக்கிய குழுக்களின் தலைமைப் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிப்பது தொடர்பில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில், மதன் கஹானா பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராகவும் அவிக்தோர் லிபர்மேன் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகவும் லிரான் அவிஷார் பென் ஹோரின் நிதிக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகவும் ரொய் ஃபோல்க்மேன் பாராளுமன்ற ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை ஆகும்.
இதனிடையே, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக காடி ஐசன்கோட்டுக்கு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் 28 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார். தேவையானால் மேலும் 14 நாட்கள் கால நீடிப்பைப் பெற்றுக்கொள்ளவும் அவருக்கு வாய்ப்புள்ளது.