யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களால் மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இரு பொலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாகவும், அவற்றின் சிதறல்கள் சபுஹா கிராமம் உள்ளிட்ட சில பகுதிகளில் விழுந்துள்ளதாகவும் சவூதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என சவூதி சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இன்று (12) வியாழக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவைத் தாங்கள் ஒருபோதும் இலக்கு வைப்பதில்லை எனவும், சவூதியிலுள்ள இராணுவ மற்றும் மூலோபாய இலக்குகள் மீது மட்டுமே தமது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ஹூதி தரப்பினர் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். எனினும், நேற்று (11) புதன்கிழமை சம்பவம் குறித்து ஹூதிகள் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

2022 ஆம் ஆண்டு ஐ.நா மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் தற்காலிகமாகத் தணிந்திருந்த மோதல்கள், இவ்வாண்டின் தொடக்கத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ஹூதிகள் சவூதி மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சவூதி அரேபியா யேமன் மீது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய மோதல் போக்கு காரணமாக, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல் வழிப் பாதையான பாப் எல்-மண்டேப் நீரிணைப் போக்குவரத்துக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.