உக்ரைனில் பிரான்ஸ் படைகள் ரகசியமாக இயங்கிவருவதாகவும், அது குறித்து பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது என்றும் சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.
உக்ரைனில் பிரான்ஸ் படைகள் ரகசியமாக இயங்கிவருவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகள் அனுப்பப்பட்டுள்ளது குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும், அது போரில் நேரடியாக பங்கேற்பதற்கு சமம் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பிரான்சுக்கு ஒரு செய்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிரட்டும் தொனியில் ரஷ்யா செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு பிரெஞ்சுப் படைகள் அனுப்பப்பட்டுள்ள விடயம் போரில் நேரடியாக பங்கேற்பதற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ள கருத்து அபத்தமானது என்று கூறி அதை நிராகரித்துள்ளது பிரான்ஸ்.

அத்துடன், உக்ரைனில் முகாமிட்டுள்ள பிரெஞ்சு படைவீரர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்று கூறியுள்ள பிரான்ஸ் துணை பாதுகாப்பு அமைச்சரான ஆலிஸ் ரூஃபோ, அவர்கள் பயிற்சி அளிப்பதற்காகவும், ஆயுதங்களை பராமரிப்பதற்காகவும் மட்டுமே உக்ரைனில் முகாமிட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், போரிடும் எந்த நோக்கமும் நோக்கமும் பிரான்சுக்கு இல்லை என்று கூறியுள்ள ரூஃபோ, அப்படியிருக்கும் நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ள விடயம் அபத்தமானது என்றும் கூறியுள்ளார்.