பிரித்தானியாவை ஆண்ட முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பில் திட்டம் ஒன்றை முன்வைத்தது.
ஆனால், அடுத்து வந்த லேபர் அரசைச் சேர்ந்த சர் கெய்ர் ஸ்டார்மர் அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்தும் திட்டத்துக்கு ஜேர்மனியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அந்த திட்டத்துக்கு, ஜேர்மன் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியை மையமாகக் கொண்ட அகதிகள் ஆதரவு அமைப்பான Pro Asyl என்னும் அமைப்பு, இந்தத் திட்டங்கள் மோசமான தோல்வியில்தான் முடிவடையும் என்று கூறியுள்ளது.
Pro Asyl அமைப்பின் நிர்வாக இயக்குநரான Karl Kopp, புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், அவர்களுக்கென உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும், ருவாண்டா ஒரு முன்மாதிரி ஜனநாயக நாடு அல்ல, அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், சில சமயங்களில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், நாங்கள் சட்டரீதியான ஆதரவுடன் அவர்களுக்குத் துணை நிற்போம் என்றும் Karl Kopp உறுதியளித்துள்ளார்.
அதேபோல, 15 நாடுகளைச் சேர்ந்த 45 தொண்டு நிறுவனங்களும் ருவாண்டா திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஆளும் பிரெட்ரிக் மெர்ஸின் கூட்டணிக்கட்சியான Social Democrats (SPD) கட்சியும், ருவாண்டா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.