தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இந்த தாழமுக்கம் புயலாக மாற்றம் பெறும். இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த ' அக்வான்' என்ற பெயரிடப்படும். இந்தப் புயலின் நகர்வுப் பாதை மற்றும் சாத்தியமான பாதிப்புக்கள் தொடர்பாக மாதிரிகளிடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் தற்போதைய நிலையின் படி இந்தப் புயல் எதிர்வரும்-19.11.2026 இரவு ஆந்திர மாநிலத்தில் உள்ள 'மொலட்டிமோகா' என்னும் இடத்திற்கு அருகே கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எதிர்வரும் நாட்களிலேயே இந்தப் புயலின் நகர்வுப் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடம் தொடர்பில் இறுதி முடிவைப் பெற முடியும். இந்தப் புயலின் காரணமாக நாளை சனிக்கிழமை (14.11.2026) முதல் கிழக்கு மாகாணத்திலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) கிழக்கு, வடக்கு, மேற்கு, வட மத்திய மாகாணத்திலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இன்று (13.11.2026) இரவு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும்- 16 ஆம் திகதிக்குப் பின்னான நாட்களில் நாட்டின் மழை நிலைமைகள் தொடர்பாக 15.11.2026 அன்றே உறுதியான நிலைப்பாட்டிற்கு வர முடியும்.
வங்காள விரிகுடாவில் உறுதியான தாழமுக்கம் உருவாகியுள்ளது. ஆகவே இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக் காரணம் கொண்டும் நாளை முதல் (14.11.2026) கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.